×

மிக்ஜாம் புயல் மழையால் சேதமடைந்த கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்க முடிவு

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சேதமடைந்த கோயில்களின் கட்டுமானங்களை ரூ.5 கோடியில் சீரமைக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட கோயில்களில் சேதமடைந்த கட்டுமானப் பணிகளை சீரமைப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட 26 கோயில்களில் சேதமடைந்த முன் அலங்கார மண்டபம், ஏகாதசி மண்டபம், படித்துறை மண்டபம், திருமதில்சுவர், வெளித்தெப்பம் சுற்றுச்சுவர் போன்ற கட்டுமானங்களை செப்பனிட்டு சீரமைக்கும் பணிகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கட்டுமானங்களை சீரமைக்க ரூ.5 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்படி, பணிகளை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இப்பணிகளை விரைந்து தொடங்கி முடித்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் மணிவாசன், அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, கவிதா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மிக்ஜாம் புயல் மழையால் சேதமடைந்த கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Mijam storm ,Chennai ,Charitable Affairs Minister ,Shekharbabu ,Mikjam ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...